Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1234

இன்பத்துப்பால்கற்பியல்124. உறுப்புநலனழிதல்

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.

paNainIngkip paintoTi sOrum tuNainIngkittolkavin vATiya tOL

Sunanda

பொருள் / உரை

முருகா எளிய உரை

உயிர்த் துணைவரான காதலர் பிரிந்து சென்றதால் தம் பழைய இயற்கை அழகை இழந்து வாடிய என் தோள்கள், பருத்த தன்மை கெட்டு மிகவும் மெலிந்து போனதால், அவற்றில் அணிந்திருந்த பசும்பொன் வளையல்களும் சுழன்று கழன்று விழுகின்றன!

• துணை நீங்கி = உயிர்த் துணைவரான காதலர் பிரிந்து சென்றதால்,• தொல் கவின் வாடிய தோள் = தம் பழைய இயற்கை எழிலை இழந்து வாடிய என் தோள்கள்;• பணை நீங்கி = தம் பருத்த தன்மை கெட்டு மெலிந்து போனதால்,• பைந்தொடி சோரும் = அவற்றில் அணிந்திருந்த பசும்பொன் வளையல்களும் சுழன்று கழன்று விழுகின்றன!

மு.வரதராசன்

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

பரிமேலழகர்

இதுவும் அது.) துணை நீங்கித் தொல்கவின் வாடிய தோள் - அன்றும் தம் துணைவர் நீங்குதலான் அவரால் பெற்ற செயற்கை அழகே அன்றிப் பழைய இயற்கை அழகும் இழந்த இத்தோள்கள்; பணை நீங்கிப் பைந்தொடி சோரும் - இன்று அதற்கு மேலே தம் பெருமை இழந்து வளை கழலா நின்றன, இவை இங்ஙனம் செயற்பாலவல்ல.(பெருமை இழத்தல் - மெலிதல். பைந்தொடி - பசிய பொன்னால்செய்த தொடி, 'சோரும்' என்னும் வளைத்தொழில் தோள்மேல் நின்றது. 'அன்றும் பிரிந்தார்' என்று அவரன்பின்மை உணர்த்தி, 'இன்றும் குறித்த பருவத்து வந்திலர்' என்று அவர் பொய்ம்மை உணர்த்தா நின்றன; 'இனிஅவற்றைக் கூறுகின்றார்மேல் குறை உண்டோ'? என்பதாம்.)

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

Meaning in English

When lover went, then faded all their wonted charms, And armlets' golden round slips off from these poor wasted arms

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout