சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்.
siRumai namakkozhiyas sETsenRAr uLLinaRumalar nANina kaN
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
தாங்க முடியாத பிரிவுத் துன்பத்தை நம்மிடம் விட்டுவிட்டு, நெடுந்தொலைவு சென்றுவிட்ட காதலரை நினைத்து ஓயாமல் அழுவதால், இவளது கண்கள் தம் அழகையெல்லாம் இழந்து, முன்பு தம்மைக் கண்டு அஞ்சிய நறுமண மலர்களுக்குத் தாமே வெட்கப்பட்டு நிற்கின்றன!
• சிறுமை நமக்கு ஒழிய = தாங்க முடியாத பிரிவுத் துன்பத்தை நம்மிடம் விட்டுவிட்டு,• சேண் சென்றார் உள்ளி = நெடுந்தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைத்து அழுதுகொண்டிருப்பதால்;• கண் = என் காதலியின் கண்கள் தம் எழிலை இழந்து,• நறுமலர் நாணின = முன்பு தம்மைக் கண்டு வெட்கப்பட்ட நறுமண மலர்களுக்குத் தாமே இன்று வெட்கப்பட்டு நிற்கின்றன!
மு.வரதராசன்
இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.
பரிமேலழகர்
(ஆற்றாமை மிகுதியான் வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.) சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி - இவ்வாற்றாமை நம்கண்ணே நிற்பத் தாம் சேணிடைச் சென்ற காதலரை நீ நினைந்து அழுதலால்; கண் நறுமலர் நாணின - நின் கண்கள் ஒளியிழந்து முன் தமக்கு நாணிய நறுமலர்கட்கு இன்று தாம் நாணிவிட்டன.(நமக்கு என்பது வேற்றுமை மயக்கம். 'உள்ள' என்பது 'உள்ளி' எனத் திரிந்து நின்றது. உள்ளுதல் என்பது காரணப்பெயர் காரியத்திற்காய ஆகுபெயர். 'இவை கண்டார் அவரைக் கொடுமை கூறுவர், நீ ஆற்றல் வேண்டும்', என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.
Meaning in English
Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see, Thinking on him, who wand'ring far, leaves us in misery





