காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.
kAlai arumpip pakalellAm pOtAkimAlai malarumin nOy
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
பரிவால் விளையும் இந்தக் காம நோயாகிய மலரானது, காலைப் பொழுதில் மெல்லிய அரும்பாய்த் தோன்றி, பகல் முழுவதும் பேரரும்பாக முதிர்ந்து, மாலைப் பொழுதில் முழு மலராய் மலர்ந்து என் உயிரை வாட்டுகின்றது!
• இந் நோய் = பிரிவால் விளையும் இந்தக் காம நோயாகிய மலரானது;• காலை அரும்பி = காலைப் பொழுதில் மெல்லிய அரும்பாய்த் தோன்றி,• பகல் எல்லாம் போது ஆகி = பகல் முழுவதும் பேரரும்பாக முதிர்ந்து விரிந்து,• மாலை மலரும் = மாலைப் பொழுதில் முழு மலராய் மலர்ந்து உயிரை வாட்டுகின்றது!
மு.வரதராசன்
இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.
பரிமேலழகர்
('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும். (துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா
காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.
Meaning in English
My grief at morn a bud, all day an opening flower, Full-blown expands in evening hour





