நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.
nanavena onRillai Ayin kanavinARkAtalar nIngkalar man
Sreya Jayadeep
பொருள் / உரை
முருகா எளிய உரை
நடுவே வந்து கனவைக் கலைத்துவிடும் 'விழித்தெழும் நனவு' என்ற கொடிய ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால், கனவில் வந்து என்னை அணைத்துக் கொண்ட என் காதலர் என்னை விட்டு ஒருபோதும் பிரியாமலே இருந்திருப்பாரே!
• நனவு என ஒன்று இல்லை ஆயின் = நடுவே வந்து கனவைக் கலைக்கும் 'விழித்தெழும் நனவு' என்ற கொடிய ஒன்று மட்டும் இல்லாதிருந்தால்;• கனவினால் காதலர் நீங்கலர் மன் = கனவில் வந்து என்னை அணைத்துக் கொண்ட என் காதலர் என்னை விட்டு ஒருபோதும் பிரியாமலே இருந்திருப்பாரே!
மு.வரதராசன்
நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.
Meaning in English
And if there were no waking hour, my love In dreams would never from my side remove





