Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1212

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.

kayaluNkaN yAnirappat tunjsin kalantArkkuyaluNmai sARRuvEn man

Shamala Devi

பொருள் / உரை

முருகா எளிய உரை

நான் மன்றாடி வேண்டுவதைக் கேட்டு, மை தீட்டிய என் கண்கள் சிறிது நேரம் தூங்குமானால், அப்போது வரும் கனவில் என் காதலரைச் சந்தித்துப் பிரிவுத் துயரிலும் நான் இன்னும் சாகாமல் உயிரைத் தாங்கிப் பிழைத்திருக்கும் உண்மையை அவரிடம் நானே விரிவாக எடுத்துச் சொல்வேனே!

• யான் இரப்ப = நான் மன்றாடி வேண்டுவதைக் கேட்டு,• கயல் உண்கண் துஞ்சின் = கயல்மீன் போன்ற மை தீட்டிய என் கண்கள் சிறிது நேரம் தூங்குமானால்;• கலந்தார்க்கு = அப்போது வரும் கனவில் என் காதலரைச் சந்தித்து,• உயல் உண்மை சாற்றுவேன் மன் = இந்தப் பிரிவுத் துயரிலும் நான் இன்னும் சாகாமல் உயிரைத் தாங்கிப் பிழைத்திருக்கும் உண்மையை அவரிடம் நானே எடுத்துச் சொல்வேனே!

மு.வரதராசன்

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

பரிமேலழகர்

(தூது விடக் கருதியாள் சொல்லியது, ) கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் - துஞ்சாது வருந்துகின்ற என் கயல் போலும் உண்கண்கள் யான் இரந்தால் துஞ்சுமாயின்; கலந்தார்க்கு உயல் உண்மை சாற்றுவேன் - கனவிடைக் காதலரைக் காண்பேன், கண்டால் அவர்க்கு யான் ஆற்றியுளேனாய தன்மையை யானே விரியச் சொல்வேன்.('கயலுண்கண்' என்றாள்,கழிந்த நலத்திற்கு இரங்கி. உயல் - காம நோய்க்குத் தப்புதல். தூதர்க்குச் சொல்லாது யாம் அடக்குவனவும், சொல்லுவனவற்றுள்ளும் சுருக்குவனவற்றின் பரப்பும் தோன்றச் சொல்வேன் என்னும் கருத்தால், 'சாற்றுவேன்'என்றாள். இனி, அவையும் துஞ்சா: சாற்றலுங்கூடாது என்பது படநின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. முன்னும் கண்டாள் கூற்றாகலின், கனவு நிலை உரைத்தலாயிற்று.)

சாலமன் பாப்பையா

கண்கள் யான் வேண்டுவதுபோல் தூங்குமானால், ( அப்போது வரும் கனவில் காணும்) காதலர்க்கு யான் தப்பிப் பிழைத்திருக்கும்‌ தன்மையைச் சொல்வேன்.

Meaning in English

If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'er

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout