Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1211

இன்பத்துப்பால்கற்பியல்122. கனவுநிலையுரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.

kAtalar tUtoTu vanta kanavinukkiyAtusey vEnkol viruntu

V. N. Nivedha

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் பிரிவுத் துயரைப் போக்கும் வண்ணம், வெளியூர் சென்ற என் காதலர் அனுப்பிய இனிய தூதுச் செய்தியோடு என்னிடம் வந்து சேர்ந்த இந்தக் கனவுக்கு, நன்றிக் கைம்மாறாக நான் என்ன உபசாரத்தைச் செய்து விருந்து படைப்பேனோ?

• காதலர் தூதொடு வந்த கனவினுக்கு = என் பிரிவுத் துயரைப் போக்க என் காதலர் அனுப்பிய இனிய தூதுச் செய்தியோடு வந்த இந்தக் கனவுக்கு;• விருந்து யாது செய்வேன் கொல் = கைம்மாறாக என்ன உபசாரத்தைச் செய்து விருந்து படைப்பேனோ?

மு.வரதராசன்

( யான் பிரிவால் வருந்தி உறங்கியபோது) காதலர் அனுப்பிய தூதோடு வந்த கனவுக்கு உரிய விருந்தாக என்ன செய்து உதவுவேன்?

பரிமேலழகர்

(தலைமகன் தூது வரக் கண்டாள் சொல்லியது). காதலர் தூதொடு வந்த கனவினுக்கு -யான் வருந்துகின்றது அறிந்து அது தீரக் காதலர் விடுத்த தூதினைக் கொண்டு என் மாட்டு வந்த கனவினுக்கு; விருந்து யாது செய்வேன் -விருந்தாக யாதனைச் செய்வேன்? ('விருந்து' என்றது விருந்திற்குச் செய்யும் உபசாரத்தினை. அது கனவிற்கு ஒன்று காணாமையின், 'யாது செய்வேன்' என்றாள்.)

சாலமன் பாப்பையா

என் மன வேதனையை அறிந்து அதைப் போக்க, என்னவர் அனுப்பிய தூதை என்னிடம் கொண்டு வந்த கனவிற்கு நான் எதை விருந்தாகப் படைப்பேன்?

Meaning in English

It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout