விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்அளியின்மை ஆற்ற நினைந்து.
viLiyumen innuyir vERallam enpAraLiyinmai ARRa ninaintu
Kalyani Nair
பொருள் / உரை
முருகா எளிய உரை
'நாம் இருவரும் உடலால் இருவராயினும் உயிரால் ஒன்றே' என்று முன்பு உறுதி கூறிய காதலர், இப்போது சிறிதும் அன்பில்லாமல் பிரிந்து நிற்பதை நினைத்து நினைத்து, என்னுடைய இனிய உயிரானது மெல்ல மெல்ல அழிந்து போகின்றது!
• வேறு அல்லம் என்பார் = 'நாம் இருவரும் இருவேறு உடல்களாயினும் ஒரே உயிராவோம்' என்று முன்பு கூறிய காதலர்,• அளியின்மை ஆற்ற நினைந்து = இப்போது சிறிதும் அன்பில்லாமல் பிரிந்து நிற்பதை நினைத்து நினைத்து;• என் இன் உயிர் விளியும் = என்னுடைய இனிய உயிரானது மெல்ல மெல்ல அழிந்து போகின்றது!
மு.வரதராசன்
நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.
பரிமேலழகர்
(தலைமகன் தூது வரக் காணாது வருந்துகின்றாள், வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது) வேறு அல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து - முன்பெல்லாம் நாம் இருவரும் வேறல்லம் என்று சொல்லுவாரது அளியின்மையை மிகவும் நினைந்து: என் இன்னுயிர் விளியும்-எனது இனிய உயிர் கழியாநின்றது. (அளியின்மை - பின் வருவாராகலுமாய்ப் பிரிதலும், பிரிந்து வாராமையும், ஆண்டு நின்றுழித் தூது விடாமையும் முதலாயின. பிரிவாற்றல் வேண்டும் என வற்புறுத்தாட்கு, 'என்னுயிர் கழிகின்றது பிரிவிற்கு அன்று; அவரன்பின்மைக்கு' என எதிர்அழிந்து கூறியவாறு)
சாலமன் பாப்பையா
நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.
Meaning in English
Dear life departs, when his ungracious deeds I ponder o'er, Who said erewhile, 'We're one for evermore'





