எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோகாதலர் செய்யும் சிறப்பு.
enaittu ninaippinum kAyAr anaittanROkAtalar seyyum siRappu
Hema Sudhakar
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் காதலரை நான் எவ்வளவு மிகுதியாக இடைவிடாமல் நினைத்துப் பார்த்தாலும் அவர் என் மேல் சினம் கொள்ள மாட்டார்; பிரிந்திருக்கும் என் காதலர் எனக்குச் செய்யும் அருமையான பேரன்பின் நன்மை அவ்வளவே அன்றோ!
• எனைத்து நினைப்பினும் காயார் = என் காதலரை நான் எவ்வளவு மிகுதியாக இடைவிடாமல் நினைத்துப் பார்த்தாலும் அவர் என் மேல் சினம் கொள்ள மாட்டார்;• காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ = பிரிந்திருக்கும் என் காதலர் எனக்குச் செய்யும் அருமையான பேரன்பின் நன்மை அவ்வளவே அன்றோ!
மு.வரதராசன்
காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ!
பரிமேலழகர்
(இத்துன்பம் அறிந்து வந்து காதலர் நினக்கு இன்பம் செய்வர் என்றாட்குச் சொல்லியது.) எனைத்து நினைப்பினும் காயார் - தம்மை யான் எத்துணையும் மிக நினைந்தாலும் அதற்கு வெகுளார்; காதலர் செய்யும் சிறப்பு அனைத்து அன்றோ-காதலர் எனக்குச் செய்யும் இன்பமாவது அவ்வளவன்றோ? (வெகுளாமை:அதற்கு உடன்பட்டு நெஞ்சின் கண் நிற்றல். தனக்கு அவ்வின்பத்திற் சிறந்தது இன்மையின் அதனைச் 'சிறப்பு' என்றாள். 'காதலர் நம்மாட்டருள்' என்றும் 'செய்யுங் குணம்' என்றும் பாடம் ஓதுவாரும் உளர். தோழி கூறிய அதனைக் குறிப்பான் இகழ்ந்து கூறியவாறு.)
சாலமன் பாப்பையா
அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ!
Meaning in English
My frequent thought no wrath excites It is not so? This honour doth my love on me bestow





