உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்கள்ளினும் காமம் இனிது.
uLLinum tIrAp perumakizh seytalAlkaLLinum kAmam initu
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
பிரிந்திருக்கும் வேளையிலும் முன் கூடியிருந்த நினைவுகளை எண்ணிப் பார்த்தாலே என்றும் குறையாத எல்லையற்ற பேரானந்தத்தைத் தருவதால், அருந்திய போது மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது எத்தனையோ மடங்கு இனிமையானதாகும்!
• உள்ளினும் = பிரிந்திருக்கும் காலத்தில் முன் கூடியிருந்த இன்பத்தை நினைத்தாலும் கூட,• தீராப் பெருமகிழ் செய்தலால் = என்றும் குறையாத எல்லையற்ற பேரானந்தத்தைத் தருவதால்;• கள்ளினும் = உண்ட போதில் மட்டுமே மயக்கமும் மகிழ்ச்சியும் தரும் மதுவை விட,• காமம் இனிது = காதல் இன்பமானது எத்தனையோ மடங்கு இனிமையானதாகும்!
மு.வரதராசன்
நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.
பரிமேலழகர்
(தூதாய்ச் சென்ற பாங்கனுக்குத் தலைமகன் சொல்லியது.) உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்- முன் கூடிய ஞான்றை இன்பத்தினைப் பிரிந்துழி நினைத்தாலும் அதுபொழுது பெற்றாற்போல நீங்காத மிக்க மகிழ்ச்சியைத் தருதலால்; கள்ளினும் காமம் இனிது - உண்டுழியல்லது மகிழ்ச்சி செய்யாத கள்ளினும் காமம் இன்பம் பயத்தல் உடைத்து.(தன் தனிமையும், தலைமகளை மறவாமையும் கூறியவாறு)
சாலமன் பாப்பையா
முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.
Meaning in English
From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings





