உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.
uRAark kuRunOy uraippAy kaTalaisseRAaay vAzhiya nenjsu
Binitha Balan
பொருள் / உரை
முருகா எளிய உரை
என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக! உன் மீது அன்பில்லாத காதலரிடம் போய் உன் தீராத பெருந்துன்பத்தைச் சொல்லி முறையிடத் துடிக்கிறாயே; அந்த முடியாத காரியத்தை விடுத்து, உனக்குத் துன்பம் தரும் இந்தக் கடலை மண்ணிட்டுத் தூர்க்க முயற்சி செய், அது இதைவிட எளிதான செயலாகும்!
• நெஞ்சு வாழிய = என் நெஞ்சமே! நீ வாழ்வாயாக!• உறார்க்கு = உன் மீது சிறிதும் அன்பு இல்லாத காதலரிடம்,• உறுநோய் உரைப்பாய் = உன் அளப்பரிய பெருந்துன்பத்தை முறையிட நினைக்கின்றாயே;• கடலைச் செறாய் = அந்த முடியாத காரியத்தை விட்டுவிட்டு, உனக்குத் துயரம் தரும் இந்தக் கடலை மண்ணிட்டுத் தூர்க்க முயற்சி செய், அது இதைவிட எளிதாக முடியும்!
மு.வரதராசன்
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
பரிமேலழகர்
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)
சாலமன் பாப்பையா
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
Meaning in English
Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea





