நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டுஇசையும் இனிய செவிக்கு.
nasaiiyAr nalkAr eninum avarmATTisaiyum iniya sevikku
Vidya Jayaraman
பொருள் / உரை
முருகா எளிய உரை
நான் உயிராக விரும்பிய காதலர் என்னிடம் திரும்பி வந்து அன்பு பாராட்ட மாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய ஏதேனும் ஒரு சிறிய செய்தியோ புகழ்ச் சொல்லோ நம் காதில் விழுந்தால், அது என் செவிகளுக்கு மிகுந்த இன்பத்தைத் தரும்!
• நசைஇயார் நல்கார் எனினும் = நான் விரும்பிய காதலர் என்னிடம் மீண்டும் வந்து அன்பு செய்ய மாட்டார் என்றாலும்;• அவர்மாட்டு இசையும் = அவரைப் பற்றிய ஏதேனும் ஒரு செய்தி அல்லது புகழ்ச் சொல் வந்தாலும்,• செவிக்கு இனிய = அது என் காதுகளுக்குக் கேட்கும் போது மிகுந்த இன்பத்தைத் தரும்!
மு.வரதராசன்
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) நசைஇயார் நல்கார் எனினும் - என்னால் நச்சப்பட்ட காதலர் என்மாட்டு அன்பிலரேயாயினும்; அவர்மாட்டு இசையும் செவிக்கு இனிய - அவர் திறத்து யாதானும் ஓர் சொல்லும் என் செவிக்கு இனியவாம்.(இழிவு சிறப்பு உம்மை, 'அவர் வாரார் என்னுஞ் சொல்லாயினும் அமையும்' என்பதுபட நின்றது. 'அதுவும் பெற்றிலேன்'என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
Meaning in English
Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody





