பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்.
paruvaralum paitalum kANAnkol kAmanoruvarkaN ninRozhuku vAn
Ramya Seetharaman
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலர்கள் இருவரிடமும் சமமாக நிற்காமல், என் ஒருத்தி மேல் மட்டுமே நின்று அம்பு தொடுக்கும் இந்தக் காமக் கடவுள், என் மேனியில் படரும் பசலைத் துன்பத்தையும் நெஞ்சத்துத் தீராத துயரத்தையும் கண்ணாரப் பார்க்க மாட்டானோ?
• காமன் ஒருவர்கண் நின்று ஒழுகுவான் = காதலர்கள் இருவரிடமும் சமமாக நிற்காமல், என் ஒருத்தி மேல் மட்டுமே நின்று போர் தொடுக்கும் இந்தக் காமக் கடவுள்;• பருவரலும் பைதலும் காணான்கொல் = என் மேனியில் படரும் பசலைத் துன்பத்தையும் நெஞ்சத்துத் துயரத்தையும் கண்ணாரக் காண மாட்டானோ?
மு.வரதராசன்
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
பரிமேலழகர்
(இதுவும் அது.) ஒருவர்கண் நின்று ஒழுகுவான் காமன் - காமம் நுகர்தற்கு உரிய இருவரிடத்தும் ஒப்பநிற்றல் ஒழிந்து ஒருவரிடத்தே நின்று பொருகின்ற காமக் கடவுள்; பருவரலும் பைதலும் காணான்கொல் - அவ்விடத்துப் பசப்பானாய பருவரலும் படர் மிகுதியும் அறியான் கொல்லோ. ('விழைவும் வெறுப்பும் இன்றி எல்லார்கண்ணும் நிகழ்ந்தன அறிதற்குரிய கடவுளும் என்கண் வேறுபட்டான், இனி யான் உய்யுமாறு என்னை'? என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?
Meaning in English
While Kaman rushes straight at me alone, Is all my pain and wasting grief unknown





