பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்நல்காமை தூற்றார் எனின்.
pasappenap pErpeRutal nanRE nayappittArnalkAmai tURRAr enin
Sharanya Shyaam
பொருள் / உரை
முருகா எளிய உரை
அன்று என்னைச் சம்மதிக்க வைத்துப் பிரிந்து சென்ற காதலரை 'அன்பில்லாதவர்' என்று இந்த ஊரார் தூற்றாமல் இருப்பார்கள் என்றால், என்னைப் 'பசலை நிறம் படர்ந்தவள்' என்று ஊரார் ஏசிப் பெயர் சூட்டுவதையும் நான் மனமுவந்து ஏற்றுக் கொள்வேன்!
• நயப்பித்தார் = அன்று என்னைச் சம்மதிக்க வைத்துப் பிரிந்து சென்ற காதலரின்,• நல்காமை தூற்றார் எனின் = அன்பில்லாத பிரிவை இந்த ஊரார் பழித்துரைக்க மாட்டார்கள் என்றால்;• பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே = 'பசலை நிறம் படர்ந்தவள்' என்று ஊரார் என்னை அழைத்துப் பெயர் சூட்டுவதும் எனக்கு மகிழ்ச்சியே!
மு.வரதராசன்
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.
பரிமேலழகர்
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று. ('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.
Meaning in English
'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain





