Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1188

இன்பத்துப்பால்கற்பியல்119. பசப்புறுபருவரல்

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்துறந்தார் அவர்என்பார் இல்.

pasantAL ivaLenpa tallAl ivaLaittuRantAr avarenpAr il

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

'பிரிவு தாங்காமல் இவள் உடம்பெல்லாம் பசலை படர வாடுகிறாள்' என்று என் மீது பழி சுமத்துவதைத் தவிர, 'இவளைத் தனியே விட்டுவிட்டுக் காதலர் பிரிந்து போய்விட்டாரே' என்று அவரைப் பழித்துரைப்பவர் இந்த ஊரில் ஒருவரும் இல்லையே!

• இவள் பசந்தாள் என்பது அல்லால் = 'இவள் பிரிவு தாங்காமல் தன் உடம்பெல்லாம் பசலை படர வாடுகிறாள்' என்று என் மீது பழி கூறுவதைத் தவிர;• இவளை அவர் துறந்தார் என்பார் இல் = 'இவளைத் தனியே தவிக்க விட்டுவிட்டு அவர் பிரிந்து சென்றுவிட்டார்' என்று காதலரைக் குற்றம் கூறுவார் ஒருவரும் இந்த ஊரில் இல்லையே!

மு.வரதராசன்

இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!

பரிமேலழகர்

('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.)

சாலமன் பாப்பையா

இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை.

Meaning in English

On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout