விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
viLakkaRRam pArkkum iruLEpOl koNkaNmuyakkaRRam pArkkum pasappu
V. Srividhya
பொருள் / உரை
முருகா எளிய உரை
எரியும் விளக்கின் ஒளி மங்கிச் சுடர் குறையும் தருணத்தை எதிர்பார்த்துப் பாயும் இருளைப் போல, காதலனுடைய இறுகிய அணைப்புச் சற்றுத் தளரும் சமயத்தை எதிர்பார்த்து இந்தப் பசலை நிறம் என் உடலில் பாயக் காத்திருக்கிறது!
• விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் = எரியும் விளக்கின் ஒளி மங்கிச் சுடர் குறையும் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இருளைப் போல;• பசப்பு = இந்தப் பசலை நிறமானது,• கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் = காதலனுடைய அணைப்புச் சற்றுத் தளரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது!
மு.வரதராசன்
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப் போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பார்த்துக் காத்திருக்கினறது.
பரிமேலழகர்
(இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. ('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)
சாலமன் பாப்பையா
விளக்கு மெலிவதைப் பார்த்து நெருங்கும் இருட்டைப் போல என்னவரின் தழுவல் நெகிழ்வதைப் பார்த்துக் காத்திருந்த பசலை வரும்.
Meaning in English
As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace





