அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்மேனிமேல் ஊரும் பசப்பு.
avartantAr ennum takaiyAl ivartantenmEnimEl Urum pasappu
Prashanti Chopra
பொருள் / உரை
முருகா எளிய உரை
'என்னை உண்டாக்கித் தந்தவர் அந்தக் காதலரே' என்ற பெருமிதத்தோடும் உரிமையோடும், இந்தப் பசலை நிறமானது என் மேனியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு உடல் முழுவதும் பரவி ஊர்ந்து செல்கிறது!
• அவர் தந்தார் என்னும் தகையால் = 'என்னை உண்டாக்கியவர் அந்தக் காதலரே' என்ற பெருமிதத்தோடு,• பசப்பு = இந்தப் பசலை நிறமானது,• இவர்தந்து = உரிமையோடு மேற்கொண்டு ஏறி,• என் மேனிமேல் ஊரும் = என்னுடைய மேனியெங்கும் பரவி ஊர்ந்து செல்கிறது!
மு.வரதராசன்
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.
பரிமேலழகர்
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.
Meaning in English
'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes





