Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1181

இன்பத்துப்பால்கற்பியல்119. பசப்புறுபருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்பண்பியார்க்கு உரைக்கோ பிற.

nayantavarkku nalkAmai nErntEn pasantavenpaNpiyArk kuraikkO piRa

Sushama Rangarajan

பொருள் / உரை

முருகா எளிய உரை

என்னை ஆசையோடு விரும்பிய காதலர் அன்று பொருள்தேடிப் பிரிந்து செல்வதற்கு நானே உடன்பட்டு விடை கொடுத்தேன்; ஆனால் இன்று அவர் பிரிவைத் தாங்க முடியாமல் என் மேனியெல்லாம் பசலை நிறம் படர்ந்து வாடும் இந்த அவல நிலையை நான் வேறு யாரிடம் போய்ச் சொல்வேன்?

• நயந்தவர்க்கு = என்னை ஆசையோடு விரும்பிய காதலர்க்கு,• நல்காமை நேர்ந்தேன் = அன்று அவர் பிரிந்து செல்வதற்கு நானே சம்மதித்து விடை கொடுத்தேன்;• பசந்த என் பண்பு = ஆனால் இன்று பிரிவுத் துன்பம் தாங்காமல் என் உடம்பெல்லாம் பசலை படர்ந்து பொலிவிழந்து நிற்கும் இந்த இயல்பை,• யார்க்கு உரைக்கோ = நான் வேறு யாரிடம் போய் முறையிடுவேன்?

மு.வரதராசன்

விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

பரிமேலழகர்

(முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.)

சாலமன் பாப்பையா

என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?

Meaning in English

I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout