Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1179

இன்பத்துப்பால்கற்பியல்118. கண்விதுப்பழிதல்

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.

vArAkkAl tunjsA varintunjsA AyiTaiAranjar uRRana kaN

R. Chaithanya

பொருள் / உரை

முருகா எளிய உரை

காதலர் வராத போது அவர் வருகையை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை; அவர் வந்து சேர்ந்த போதோ எங்கே மீண்டும் பிரிந்து சென்றுவிடுவாரோ என்று அஞ்சித் தூங்குவதில்லை; இவ்வாறு எக்காலத்திலும் தூக்கமின்றி என் கண்கள் தீராத பெருந்துன்பத்தை அனுபவிக்கின்றன!

• வாராக்கால் துஞ்சா = காதலர் வராத போது எப்போது வருவாரோ என்று எதிர்பார்த்துத் தூங்குவதில்லை;• வரின் துஞ்சா = அவர் வந்து கூடி இருக்கும் போதோ எங்கே பிரிந்து விடுவாரோ என்று அஞ்சித் தூங்குவதில்லை;• ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன = இவ்வாறு எக்காலத்திலும் தூங்க வழியின்றி என் கண்கள் தாங்க முடியாத பெருந்துன்பத்தை அடைகின்றன!

மு.வரதராசன்

காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

பரிமேலழகர்

('நீயும் ஆற்றி நின் கண்களும் துயில்வனவாதல் வேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.) வாராக்கால் துஞ்சா - காதலர் வாராத ஞான்று அவர் வரவு பார்த்துத் துயிலா; வரின் துஞ்சா - வந்த ஞான்று, அவர் பிரிவஞ்சித் துயிலா; ஆயிடைக்கண் ஆரஞர் உற்றன- ஆதலான் அவ்விருவழியும் என் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தினை உடைய ('ஆயிடை' எனச் சுட்டு நீண்டது. 'இனி அவற்றிற்குத் துயில் ஒரு ஞான்றும் இல்லை' என்பதாம்)

சாலமன் பாப்பையா

அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

Meaning in English

When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout