பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண்.
pENAtu peTTAr uLarmannO maRRavarkkANA tamaivila kaN
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
உள்ளத்தில் உண்மையான பாசமின்றி வாய்வார்த்தையால் மட்டுமே என்னை விரும்பிய காதலர் எங்கேனும் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்; ஆனால் அவரைக் கண்ணால் நேரில் காணாமல் என் கண்கள் அமைதி கொள்ளாமல் துடிக்கின்றனவே!
• பேணாது பெட்டார் உளர் மன்னோ = உள்ளத்தில் உண்மையான அன்பின்றி வாய்வார்த்தையால் மட்டும் என்னை விரும்பிய காதலர் ஓரிடத்தில் நன்றாகவே இருக்கிறார்;• மற்று அவர்க் காணாது = ஆனால் அவரைக் கண்ணால் காணாமல்,• கண் அமைவில = என் கண்கள் அமைதி அடையாமல் துடிக்கின்றனவே!
மு.வரதராசன்
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.
பரிமேலழகர்
('காதலர் பிரிந்து போயினாரல்லர், அவர் ஈண்டுளர். அவரைக் காணுமளவும் நீ ஆற்றல் பெற வேண்டும்', என்ற தோழிக்குச் சொல்லியது.)பேணாது பெட்டார் உளர்-நெஞ்சால் விழையாதுவைத்துச் சொல்மாத்திரத்தால விழைந்தவர் இவ்விடத்தே உளர்; மற்று அவர்க்கண் காணாது அமைவில - அவ்வுண்மையாற் பயன் யாது, அவரைக் கண்கள் காணாது அமைகின்றன இல்லையாயின்?(செயலாற் பிரிந்துநின்றமையின் 'பேணாது' என்றும், முன் நலம் பாராட்டிப் பிரிவச்சமும் வன்புறையும் கூறினாராகலின், 'பெட்டார்' என்றும் கூறினாள். 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, 'மற்று' வினை மாற்றின்கண் வந்தது. 'ஓகாரம்' அசைநிலை. யான் ஆற்றவும் கண்கள் அவரைக் காண்டற்கு விரும்பாநின்றன என்பதாம். இனிக் 'கொண்கனை'என்று பாடமாயின் 'என் கண்கள் தம்மைக் காணாது அமைகின்ற கொண்கனைத் தாம் காணாதமைகின்றனவில்லை. இவ்வாறே தம்மையொருவர் விழையாதிருக்கத் தாம் அவரை விழைந்தார் உலகத்துளரோ'? என்று உரைக்க. இதற்கு 'மன்' அசைநிலை)
சாலமன் பாப்பையா
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!
Meaning in English
Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain





