Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1170

இன்பத்துப்பால்கற்பியல்117. படர்மெலிந்திரங்கல்

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோஎன் கண்.

uLLampOn RuLvazhis selkiRpin veLLanIrnIntala mannOven kaN

Saranya Mantgol

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் மனமானது நினைத்த மாத்திரத்தில் காதலர் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவதைப் போல, என் கண்களும் அவர் இருக்கும் இடத்திற்குச் செல்ல முடியுமானால், என் கண்கள் இங்ஙனம் கண்ணீர் வெள்ளத்தில் விழுந்து தத்தளிக்க வேண்டியதில்லையே!

• உள்ளம் போன்று = என் மனமானது நினைத்த மாத்திரத்தில் காதலர் இருக்கும் இடத்திற்குப் பறந்து செல்வது போல;• என் கண் உள்வழி செல்கிற்பின் = என் கண்களும் அவர் இருக்கும் இடத்திற்கு விரைந்து செல்ல முடியுமானால்,• வெள்ளநீர் நீந்தல மன் = என் கண்கள் இங்ஙனம் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கித் தத்தளிக்க வேண்டியதில்லையே!

மு.வரதராசன்

காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என்‌ கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.

பரிமேலழகர்

(நின் கண்கள் பேரழகு அழிகின்றனவாகலின் அழற்பாலையல்லை, என்றாட்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் - மனம் போலக் காதலருள்ள தேயத்துக் கடிதிற்செல்ல வல்லன ஆயின், என் கண் வெள்ளநீர் நீந்தல - என கண்கள் இங்ஙனம் வெள்ளமாகிய தம் நீரை நீந்தா. (அது மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ளது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. மனத்திற்குச் செலவாவது நினைவேயாகலின், 'உள்ளம் போன்று' என்றும், மெய்க்கு நடந்து செல்ல வேண்டுதலின் கண்கள் அதனொடு சென்று காதலரைக் காண்டல் கூடாது என்னும் கருத்தால் 'செல்கிற்பின்' என்றும் கூறினாள். இதனான் வருகின்ற அதிகாரமும் தோற்றுவாய் செய்யப்பட்டது.)

சாலமன் பாப்பையா

என் மனம் போலவே என் கண்களும் என்னவர் இருக்கும் ஊருக்குச் செல்ல முடியுமானால், அவை கண்ணீர் வெள்ளத்தில் நீந்தமாட்டா.

Meaning in English

When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout