Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1168

இன்பத்துப்பால்கற்பியல்117. படர்மெலிந்திரங்கல்

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை.

mannuyir ellAm tuyiRRi aLittirAennalla tillai tuNai

Amirthavarshini

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகில் உள்ள எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டு இந்த இரவானது மிகவும் பரிதாபமாகத் தனித்து நிற்கிறது; ஏனெனில் உறக்கமின்றி அழுது கொண்டிருக்கும் என்னைத் தவிர, இந்த இரவுக்கு வேறு துணையே இல்லாமல் போய்விட்டது!

• மன் உயிர் எல்லாம் துயிற்றி = உலகில் நிலைபெற்றுள்ள உயிர்களை எல்லாம் தூங்க வைத்துவிட்டு,• இரா அளித்து = இந்த இரவானது மிகவும் பரிதாபத்திற்குரியதாக நிற்கிறது;• என் அல்லது துணை இல்லை = ஏனெனில் விழித்துக் கொண்டிருக்கும் என்னைத் தவிர அந்த இரவுக்கு வேறு துணையே இல்லாமல் போய்விட்டதே!

மு.வரதராசன்

இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.

பரிமேலழகர்

(இரவின் கொடுமை சொல்லி இரங்கியது.) இரா அளித்து - இரா அளித்தாயிருந்தது; மன் உயிர் எல்லாம் துயிற்றி என்னல்லது துணை இல்லை - உலகத்து நிலை பெறுகின்ற உயிர்களையெல்லாம் தானே துயிலப் பண்ணுதலான், என்னையல்லாது வேறு துணை உடைத்தாயிற்றில்லை. ('துயிற்றி' எனத் திரிந்து நின்ற வினையெச்சம், அவாய் நிலையான் வந்த உடைத்தாதலோடு முடிந்தது. 'துணையோடு ஒன்றுகின்ற உயிர்களெல்லாம், விட்டு இறந்துபடும் எல்லையேனாய என்னையே துணையாகக் கோடலின், அறிவின்று' என்பது பற்றி, 'அளித்து' என்றாள். இகழ்ச்சிக் குறிப்பு.)

சாலமன் பாப்பையா

பாவம் இந்த இரவு! இது எல்லா உயிர்களையும் தூங்கச் செய்துவிட்டுத் தனியாகவே இருக்கிறது. இதற்கு என்னைத் தவிர வேறு துணை இல்லை!

Meaning in English

All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout