Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1158

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்இன்னாது இனியார்ப் பிரிவு.

innA tinanillUr vAzhtal ataninuminnA tiniyArp pirivu

Lekshmi N Raj

பொருள் / உரை

முருகா எளிய உரை

அன்புடைய உறவினரோ தோழமையோ இல்லாத ஊரில் தனித்து வாழ்வது பெருந்துன்பமாகும்; ஆனால் அந்தத் தனிமைத் துயரைக் காட்டிலும் மிகக் கொடிய பெருந்துன்பம், உயிருக்கு இனிய காதலரைப் பிரிந்து வாழ்வதாகும்!

• இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது = தனக்கு உற்ற துணையும் அன்பும் இல்லாத அயல் ஊரில் வாழ்வது மிகவும் துன்பமானது;• அதனினும் இன்னாது = அந்தத் தனிமைத் துன்பத்தை விடவும் கொடிய துன்பமாகும்,• இனியார்ப் பிரிவு = உயிருக்கு இனிய காதலரைப் பிரிந்து வாழும் பிரிவின் துயர்!

மு.வரதராசன்

இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

பரிமேலழகர்

(இதுவும் அது.) இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது - மகளிர்க்குத் தம் குறிப்பு அறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது - அதன் மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது. (தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது உடன்பட்டு வந்தமை பற்றிப் புலக்கின்றாளாகலின் , 'இனன் இல் ஊர்' என்றாள். உலகியல் கூறுவாள் போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.

Meaning in English

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout