Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1157

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கைஇறைஇறவா நின்ற வளை.

tuRaivan tuRantamai tURRAkol munkaiiRaiiRavA ninRa vaLai

Vaish

பொருள் / உரை

முருகா எளிய உரை

தலைவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்ட செய்தியை, பிரிவுத் துயரால் மெலிந்த என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழுகின்ற வளையல்களே ஊரெல்லாம் அறியும்படிப் பறைசாற்றித் தெரிவித்து விடாதோ?

• துறைவன் துறந்தமை = கடல்துறைக்குரிய தலைவன் என்னைப் பிரிந்து சென்றுவிட்ட செய்தியை;• முன்கை இறை இறவாநின்ற வளை = உடம்பு மெலிந்து முன்கையின் மூட்டைக் கடந்து கழன்று விழும் என் கைவளையல்களே,• தூற்றாகொல் = ஊரெல்லாம் அறியும்படிப் பறைசாற்றிப் பழிதூற்றி விடாதோ?

மு.வரதராசன்

என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

பரிமேலழகர்

(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யாயை நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

சாலமன் பாப்பையா

அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?

Meaning in English

The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout