Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1156

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்நல்குவர் என்னும் நசை.

pirivuraikkum vankaNNar Ayin aritavarnalkuvar ennum nasai

Gayathry Rajiv

பொருள் / உரை

முருகா எளிய உரை

'நான் உன்னைப் பிரிந்து செல்லப் போகிறேன்' என்று என் எதிரிலேயே வெளிப்படையாகக் கூறும் அளவுக்குக் கல்நெஞ்சம் படைத்தவராக அவர் மாறினால், பிரிந்து சென்ற பிறகு நம் நிலையை உணர்ந்து திரும்பி வந்து அன்பு செய்வார் என்று நம்புவது வீணாகும்!

• பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் = 'நான் பிரியப் போகிறேன்' என்று என் முகத்திற்கு எதிரே சொல்லும் அளவுக்கு அவர் கல்நெஞ்சம் உடையவரானால்;• அவர் நல்குவர் என்னும் நசை அரிது = அத்தகையவர் பிரிந்து சென்ற பிறகு என் துன்பத்தை அறிந்து திரும்பி வந்து அன்பு செய்வார் என்று ஆசைப்படுவது வீணான செயலாகும்!

மு.வரதராசன்

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

பரிமேலழகர்

(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.) அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின் -நம் கவவுக் கடுமையறிந்த தலைவர், தாமே நம் முன்னின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்; நல்குவர் என்னும் நசை அரிது - அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளி செய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும். (அருமை: பயன்படுதல் இல்லாமை.. 'கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எண்ணுதலும் உணர்த்தலும் வல்லராயினார், பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்து வந்து நல்குதல் யாண்டையது'? என்பதாம். அழுங்குவித்தல் : பயன்.)

சாலமன் பாப்பையா

நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

Meaning in English

To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout