அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்தேறியார்க்கு உண்டோ தவறு.
aLittanjsal enRavar nIppin teLittasoltERiyArk kuNTO tavaRu
Kurale Kavithaiyai
பொருள் / உரை
முருகா எளிய உரை
சொல் பொருள் (பதவுரை):• அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் = அன்று அருள் கூர்ந்து 'அஞ்சாதே, உன்னைப் பிரியேன்' என்று உறுதி கூறியவரே இன்று பிரிந்து செல்வாரானால்;• தெளித்த சொல் தேறியார்க்கு = அவர் கூறிய உறுதிமொழியை மெய்யென நம்பித் தெளிந்த எனக்கு,• தவறு உண்டோ = என்ன தவறு அல்லது குற்றம் இருக்க முடியும்?எளிய விளக்கம்:அன்று பேரன்பு காட்டி 'அஞ்சாதே, உன்னை ஒருபோதும் பிரிய மாட்டேன்' என்று உறுதியளித்த காதலரே இன்று நம்மைப் பிரிந்து செல்வாரானால், அவர் வாய்மொழியை மெய்யென நம்பி நின்ற என் மீது என்ன தவறு இருக்க முடியும்?
மு.வரதராசன்
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித் தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
பரிமேலழகர்
(இதுவும் அது.) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் - எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, நின்னிற் பிரியேன் அஞ்சல் என்றவர் தாமே பின் பிரிவாராயின்; தெளிந்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ - அவர்க்கன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றம் உண்டோ? ('தேறியார்' என்பது தன்னைப் பிறர்போல் கூறல். 'சொல்லும் செயலும் ஒவ்வாமைக் குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங் குவி' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
என்னை மணந்தபோதே என்மீது அன்பு காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர் சொல்லை, நான் நம்பியது தவறோ?
Meaning in English
If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word





