Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1152

இன்பத்துப்பால்கற்பியல்116. பிரிவாற்றாமை

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்புன்கண் உடைத்தால் புணர்வு.

inkaN uTaittavar pArval pirivanjsumpunkaN uTaittAl puNarvu

Rishi Priya

பொருள் / உரை

முருகா எளிய உரை

முன்பெல்லாம் அவருடைய பார்வையே எனக்குப் பேரின்பத்தை அளித்து வந்தது; ஆனால் இப்போது அவருடன் கூடித் தழுவி மகிழும் போதும், எங்கே அவர் நம்மைப் பிரிந்து விடுவாரோ என்ற அச்சமும் பெருந்துன்பமுமே என் உள்ளத்தை வாட்டுகிறது!

• அவர் பார்வல் இன்கண் உடைத்து = முன்பு என்னை அவர் பார்த்த பார்வையே எனக்குப் பேரின்பத்தைத் தருவதாக இருந்தது;• புணர்வு = ஆனால் இப்போது உடலால் தழுவி மகிழும் இன்பமோ,• பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து = எங்கே பிரியப் போகிறாரோ என்று அஞ்சி அழும் துன்பத்தை எனக்குத் தருகிறதே!

மு.வரதராசன்

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

பரிமேலழகர்

(பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.) அவர் பார்வல் இன்கண் உடைத்து - தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்கு மாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பமுடைத்தாயிருக்கும்; புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து - இன்று அப்புணர்ச்சிதான் நிகழா நிற்கவும் அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று; அவர் அன்பின் நிலைமை இது.('பார்வல்' என்றதனால், புணர்ச்சி பெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. புன்கண் என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, 'முள்ளுறழ் முளையெயிற்று அமிழ்தூறுந் தீநீரைக் - கள்ளினும் மகிழ்செய்யும் என உரைத்தும் அமையார், என் ஒள்ளிழை திருத்தும்' (கலித்-பாலை-3)பண்டையிற் சிறப்பால். அவன் பிரிதிற் குறிப்புக் காட்டிஅச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்: பயன்.)

சாலமன் பாப்பையா

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

Meaning in English

It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout