Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1146

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்திங்களைப் பாம்புகொண் டற்று.

kaNTatu mannum orunAL alarmannumtingkaLaip pAmpukoN TaRRu

Shruthi

பொருள் / உரை

முருகா எளிய உரை

என் காதலரை நான் நேரில் சந்தித்துப் பேசியதோ ஒரே ஒரு நாள்தான்; ஆனால் ஊரார் பேசுகின்ற அலர் பேச்சோ, வானத்து முழுநிலவை ராகு பாம்பு தீண்டிய கிரகணச் செய்தி போல ஊரெல்லாம் விரைவாகப் பரவிவிட்டதே!

• காதலரைக் கண்டது ஒரு நாள் = என் காதலரை நான் நேரில் பார்த்ததோ ஒரே ஒரு நாள்தான்;• அலர் மன்னும் = ஆனால் ஊரார் பேசும் அலரோ,• திங்களைப் பாம்பு கொண்டற்று = வானத்து முழு நிலவைப் பாம்பு விழுங்கிய கிரகணச் செய்தி போல ஊர் முழுவதும் பரவிவிட்டதே!

மு.வரதராசன்

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

பரிமேலழகர்

(இடையீடுகளானும் அல்ல குறியானும் தலைமகனை எய்தப்பெறாத தலைமகள், அவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ வரைவு கடாயது.) கண்டது ஒரு நாள் - யான் காதலரைக் கண்ணுறப்பெற்றது ஒரு ஞான்றே; அலர் திங்களைப் பாம்பு கொண்டற்று -அதனினாய அலர் அவ்வளவிற்றன்றித் திங்களைப் பாம்பு கொண்ட அலர் போன்று உலகமெங்கும் பரந்தது. (காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'பாம்பு கொண்டற்று' என்றாள். இருவழியும் மன்னும், உம்மையும் அசைநிலை. 'காட்சியின்றியும் அலர் பரக்கின்ற இவ்வொழுக்கம் இனியாகாது, வரைந்து கோடல் வேண்டும்', என்பதாம்.)

சாலமன் பாப்பையா

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

Meaning in English

I saw him but one single day: rumour spreads soon As darkness, when the dragon seizes on the moon

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout