Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1144

இன்பத்துப்பால்களவியல்115. அலரறிவுறுத்தல்

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்தவ்வென்னும் தன்மை இழந்து.

kavvaiyAR kavvitu kAmam atuvinREltavvennum tanmai izhantu

Arvind Mukundan

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஊரார் தூற்றுகின்ற அலரினாலேயே என்னுடைய காதல் உணர்வானது மேலும் மேலும் செழித்து வளர்கிறது; அந்த ஊர்ப்பேச்சு மட்டும் இல்லாவிட்டால், காதலானது தன் இயல்பான சுவையும் வீரியமும் இழந்து சுருங்கிப் போயிருக்கும்!

• கவ்வையால் காமம் கவ்விது = ஊரார் பேசுகின்ற அலரினாலேயே என் காதல் பயிர் தழைத்து வளர்கிறது;• அது இன்றேல் = அந்த ஊர்ப்பேச்சு மட்டும் இல்லாவிட்டால்,• தன்மை இழந்து தவ்வென்னும் = என் காதலானது தன் சுவை குறைந்து வாடிப் போயிருக்கும்!

மு.வரதராசன்

எம் காமம் ஊரார் சொல்லுகின்ற அலரால் வளர்வதாயிற்று, அந்த அலர் இல்லையானால் அது தன் தன்மை இழந்து சுருங்கிப் போய்விடும்.

பரிமேலழகர்

(இதுவும் அது) காமம் கவ்வையால் கவ்விது - என் காமம் இவ்வூர் எடுக்கின்ற அலரானே அலர்தலை யுடைத்தாயிற்று; அது இன்றேல் தன்மை இழந்து தவ்வென்னும் - அவ்வலர் இல்லையாயின், தன் இயல்பு இழந்து சுருங்கும். (அலர்தல்: மேன்மேல் மிகுதல். செவ்வையுடையதனைச் செவ்விது என்றாற் போலக் கவ்வையுடையதனைக் 'கவ்விது' என்றார். இயல்பு: இன்பம் பயத்தல், 'தவ்வென்னும்' என்பது குறிப்பு மொழி: 'நூல்கால் யாத்த மாலை வெண்குடை, தவ்வென றசைஇத் தாழ்துளி மறைப்ப' (நெடுநல்.184-85) என்புழியும் அது.)

சாலமன் பாப்பையா

ஊரார் பேச்சினால் எங்கள் காதல் வளர்கிறது; இந்தப் பேச்சு மட்டும் இல்லை என்றால் அது சுவையற்றுச் சப்பென்று போயிருக்கும்.

Meaning in English

The rumour rising makes my love to rise; My love would lose its power and languish otherwise

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout