யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.
yAmkaNNiR kANa nakupa aRivillAryAmpaTTa tAmpaTA ARu
VY THA RA MOORTHI வை தா ர மூர்த்தி
பொருள் / உரை
முருகா எளிய உரை
காதலின் ஆழத்தை அறியாத மனிதர்கள் நான் நேரில் பார்க்கும்படியே என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர்; நான் அனுபவிக்கும் இந்த அளப்பரிய காதல் வேதனையை அவர்கள் தாமாக அனுபவித்து அறியாததே அதற்குக் காரணமாகும்!
• அறிவில்லார் = அன்பின் ஆழம் அறியாத அறிவற்ற மனிதர்கள்;• யாம் கண்ணின் காண நகுப = நான் கண்ணால் காணும்படியே என் எதிரில் என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கின்றனர்;• யாம் பட்ட தாம் படா ஆறு = நான் அனுபவிக்கும் இந்தத் தீவிரமான காதல் துயரத்தை அவர்கள் தாமாக அனுபவிக்காத காரணத்தினாலேயே அப்படிச் சிரிக்கின்றனர்!
மு.வரதராசன்
யாம் பட்ட துன்பங்களைத் தாம் படாமையால் அறிவில்லாதவர் யாம் கண்ணால் காணுமாறு எம் எதிரில் எம்மைக்கண்டு நகைக்கின்றனர்.
பரிமேலழகர்
(செவிலிக்கு அறத்தொடு நின்று வைத்து, 'யான் நிற்குமாறு என்னை' என்று நகையாடிய தோழியோடு புலந்து தன்னுள்ளே சொல்லியது,) யாம் கண்ணின்காண அறிவில்லார் நகுப - யாம் கேட்குமாறுமன்றிக் கண்ணாற் காணுமாறு எம்மை அறிவிலார் நகாநின்றார்; யாம் பட்ட தாம்படாவாறு - அவர் அங்ஙனஞ்செய்கின்றது யாம் உற்ற நோய்கள் தாம் உறாமையான். ('கண்ணின்' என்றது, முன் கண்டறியாமை உணர நின்றது. அறத்தொடு நின்றமை அறியாது வரைவு மாட்சிமைப்படுகின்றிலள் எனப் புலக்கின்றாள் ஆகலின், ஏதிலாளாக்கிக் கூறினாள். இது, நகாநின்று சேண்படுக்குந் தோழிக்குத் தலைமகன் கூறியதாங்கால், அதிகாரத்திற்கு ஏலாமை அறிக.)
சாலமன் பாப்பையா
நான் பார்க்க, இந்த அறிவற்ற மக்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கின்றனர். அப்படிச் சிரிக்க காரணம், நான் அனுபவித்த துன்பங்களை அவர்கள் அனுபவிக்காததே!
Meaning in English
Before my eyes the foolish make a mock of me, Because they ne'er endured the pangs I now must drie





