தக்கார் தகவிலர் என்பது அவரவர்எச்சத்தாற் காணப் படும்.
takkAr takavilar enpa tavaravaressattAR kANap paTum
Aadya Venkatesh
பொருள் / உரை
முருகா எளிய உரை
ஒருவர் நடுவுநிலைமை உடைய நீதிமானா அல்லது நீதி தவறியவரா என்பது, அவர் மறைந்த பின்பும் எஞ்சி நிற்கின்ற புகழாலும் பழியாலும், அவருடைய வழித்தோன்றல்களின் நற்பண்புகளாலும் தெளிவாக அறியப்படும்.
• தக்கார் = நடுவுநிலைமை உடையவர்,• தகவிலர் என்பது = நடுவுநிலைமை இல்லாதவர் என்ற உண்மையானது,• அவரவர் எச்சத்தால் = அவர்களுக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் (சந்ததியினரின் ஒழுக்கத்தாலும்)• காணப் படும் = உலகத்தாரால் தெளிவாக அறியப்படும்.
மு.வரதராசன்
நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்.
பரிமேலழகர்
தக்கார் தகவிலர் என்பது - இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும் - அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின. இதனால் தக்காரையும் தகவிலாரையும் அறியுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
இவர் நீதியாளர், இவர் நீதியற்றவர் என்ற வேறுபாட்டை அவரவர் தம் செல்வம், புகழ், பிள்ளைகளின் ஒழுக்கம் ஆகியவற்றால் அறிந்து கொள்ளலாம்.
Meaning in English
Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear





