தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
toTalaik kuRuntoTi tantAL maTaloTumAlai uzhakkum tuyar
Irwin Victoria
பொருள் / உரை
முருகா எளிய உரை
மாலை போல வரிசையாக அமைந்த சிறிய அழகிய வளையல்களை அணிந்த என் காதலி, மாலையில் நெஞ்சை வாட்டும் காதல் துயரத்தையும், அதைப் போக்க மடலேறும் செயலையும் எனக்குத் தந்துவிட்டாள்!
• தொடலைக் குறுந்தொடி = மாலை போல வரிசையாகத் தொடர்ந்த சிறிய வளையல்களை அணிந்த என் காதலி;• மாலை உழக்கும் துயர் மடலொடு = அந்தி மாலையில் நெஞ்சை வாட்டும் காதல் துயரத்தையும், அதற்கு மருந்தாகிய மடலூர்வதையும்;• தந்தாள் = எனக்குப் பரிசாகத் தந்துவிட்டாள்!
மு.வரதராசன்
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.
பரிமேலழகர்
('இவ்வாற்றாமையும் மடலும் நுமக்கு எவ்வாறு வந்தன'? என்றாட்குச் சொல்லியது.) மாலை உழக்கும் துயர் மடலொடு - மாலைப் பொழுதின்கண் அனுபவிக்கும் துயரினையும், அதற்கு மருந்தாய மடலினையும், முன் அறியேன்; தொடலைக் குறுந்தொடி தந்தாள் - இது பொழுது எனக்கு மாலை போலத் தொடர்ந்த சிறு வளையினை உடையாள் தந்தாள். (காமம் ஏனைப்பொழுதுகளினும் உளதேனும், மாலைக்கண் மலர்தல் உடைமையின், 'மாலை உழக்கும் துயர்' என்றும், மடலும் அது பற்றி வந்ததாகலின், அவ்விழிவும் அவளால் தரப்பட்டது என்றும், அவள் தான் நீ கூறியதே கூறும் இளமையள் என்பது தோன்ற, 'தொடலைக் குறுந்தொடி' என்றும் கூறினான். அப்பெயர் உவமைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, 'இவை அவள் தந்தனவாகலின் நின்னால் நீங்கும்' என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா
மாலைப் பொழுதுகளில் நான் அடையும் மயக்கத்தையும் அதற்கு மருந்தாகிய மடல் ஏறுதலையும், மலை போல வளையல் அணிந்திருக்கும் அவளே எனக்குத் தந்தாள்.
Meaning in English
The maid that slender armlets wears, like flowers entwined, Has brought me 'horse of palm,' and pangs of eventide





