காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
kAmak kaTumpunal uykkumE nANoTunallANmai ennum puNai
Amirthavarshini
பொருள் / உரை
முருகா எளிய உரை
கட்டுக்கடங்காமல் பாய்ந்து வரும் காதலாகிய கடும் பெருவெள்ளமானது, நெஞ்சை ஆற்றுவதற்காக நான் பற்றிக்கொண்ட நாணம், ஆண்மை என்னும் தெப்பங்களையே என்னிடமிருந்து அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது!
• நாணொடு நல்லாண்மை என்னும் புணை = நாணம், சிறந்த ஆண்மை என்னும் தெப்பங்களை (தோணிகளை);• காமக் கடும்புனல் உய்க்கும் = காதல் என்னும் கட்டுக்கடங்காத பெருவெள்ளமானது அடித்துக்கொண்டு சென்றுவிடுகிறது!
மு.வரதராசன்
நாணமும் நல்ல ஆண்மையுமாகிய தோணிகளைக் காமம் என்னும் கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுகின்றன.
பரிமேலழகர்
(நாணும் நல்லாண்மையும் காமவெள்ளத்திற்குப் புணையாகலின்,அதனால் அவை நீங்குவன அல்ல என்றாட்குச் சொல்லியது) நாணொடு நல்லாண்மை என்னும் புணை - யான் தன்னைக் கடத்தற்குக் கொண்ட நாணும் நல்லாண்மையும் ஆகிய புணைகளை; காமக்கடும் புனல் உய்க்குமே - என்னிற பிரித்துக் காமமாகிய கடிய புனல் கொண்டு போகாநின்றது. (அது செய்யமாட்டாத ஏனைப் புனலின் நீக்குதற்கு, 'கடும்புனல்' என்றான். 'இப்புனற்கு அவை புணையாகா; அதனான் அவை நீங்கும்', என்பதாம்.)
சாலமன் பாப்பையா
ஆம்; நாணம், ஆண்மை என்னும் படகுகளைக் காதலாகிய கடும் வெள்ளம் அடித்துக் கொண்டு போய்விட்டது.
Meaning in English
Love's rushing tide will sweep away the raft Of seemly manliness and shame combined





