Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1125

இன்பத்துப்பால்களவியல்113. காதற்சிறப்புரைத்தல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

uLLuvan manyAn maRappin maRappaRiyEnoLLamark kaNNAL kuNam

Aravind Srinivas

பொருள் / உரை

முருகா எளிய உரை

ஒளிரும் அழகிய விழிகளையுடைய என் காதலியின் இனிய குணங்களை நான் மறந்திருந்தால் அல்லவா அவளை நினைத்துப் பார்ப்பதற்கு? ஒரு கணமும் நான் அவளை மறப்பதே இல்லை!

• ஒள் அமர்க் கண்ணாள் குணம் = ஒளிரும் போர் விழிகளையுடைய என் காதலியின் சிறந்த நற்குணங்களை,• யான் மறப்பின் உள்ளுவன் = நான் ஒருபொழுதாவது மறந்திருந்தால் தானே மீண்டும் நினைத்துப் பார்ப்பதற்கு?• மறப்பு அறியேன் = அவளை ஒரு கணமும் மறக்கவே அறியாதவன் நான்!

மு.வரதராசன்

போர் செய்யும் பண்புகளை உடைய இவளுடைய பண்புகளை யான் மறந்தால் பிறகு நினைக்க முடியும் ஆனால் ஒரு போதும் மறந்ததில்லையே.

பரிமேலழகர்

(ஒருவழித் தணந்துவந்த தலைமகன், நீயிர் தணந்த ஞான்று எம்மை உள்ளியும் அறிதீரோ? என்ற தோழிக்குச் சொல்லியது.) ஒள் அமர்க்கண்ணாள் குணம், யான் மறப்பின் உள்ளுவன் - ஒள்ளியவாய் அமரைச் செய்யும் கண்ணினையுடையாள் குணங்களை யான் மறந்தேனாயின், நினைப்பேன்; மறப்பு அறியேன் - ஒரு பொழுதும் மறத்தலையறியேன், ஆகலான் நினைத்தலையும் அறியேன். (மன் : ஒழியிசைக்கண் வந்தது. குணங்கள்: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு முதலாயின. இத்துணையும் தலைமகன் கூற்று, மேல் தலைமகள் கூற்று.)

சாலமன் பாப்பையா

ஒளியுடன் கூடிய கண்களை உடைய என் மனைவியின் குணங்களை நான் மறந்தால் அல்லவா அவளை நினைப்பதற்கு? மறப்பதும் இல்லை. அதனால் நினைப்பதும் இல்லை.

Meaning in English

I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout