Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1123

இன்பத்துப்பால்களவியல்113. காதற்சிறப்புரைத்தல்

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்திருநுதற்கு இல்லை இடம்.

karumaNiyiR pAvAynI pOtAyAm vIzhumtirunutaR killai yiTam

Sam Keerthan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• கருமணியிற் பாவாய் நீ போதாய் = என் கண்ணின் கருமணியில் குடியிருக்கும் கண் பாவையே, நீ அங்கிருந்து விலகிப் போய்விடு;• யாம் வீழும் திருநுதற்கு = எம்மால் உயிரென விரும்பப்படும் அழகிய நெற்றியையுடைய என் காதலி என் கண்ணுக்குள் தங்குவதற்கு,• இடம் இல்லை = நீயும் இருந்தால் அங்கே அவளுக்கு இடம் போதவில்லையே!எளிய விளக்கம்:என் கண்ணின் கருமணியில் குடியிருக்கும் பாவையே! நீ அங்கிருந்து சற்று விலகிப் போய்விடு; நான் உயிரென நேசிக்கும் அழகிய நெற்றியையுடைய என் காதலி என் கண்ணுக்குள் நிரந்தரமாகக் குடியிருக்க இடம் போதவில்லையே!

மு.வரதராசன்

என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

பரிமேலழகர்

(இடந்தலைப்பாட்டின்கண் தலைமகள் நீக்கத்துச் சொல்லியது.) கருமணியிற் பாவாய் நீ போதாய் - என் கண்ணிற் கருமணியின்கண் உறையும் பாவாய், நீ அங்கு நின்றும் போதருவாயாக; யாம் வீழும் திருநுதற்கு இடம் இல்லை - போதராதிருத்தியாயின் எம்மால் விரும்பப்பட்ட திருநுதலையுடையாட்கு இருக்க இடமில்லையாம். ('யான் காணாது அமையாமையின் இவள் புறத்துப் போகற்பாலளன்றி என் கண்ணுள் இருக்கற்பாலள்; இருக்குங்கால் நின்னோடு ஒருங்கு இருக்க இடம் போதாமையின், நின்னினும் சிறந்த இவட்கு இடத்தைக் கொடுத்து நீ போதுவாயாக' என்பதாம்.)

சாலமன் பாப்பையா

என் கருமணிக்குள் இருக்கும் பாவையே! நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.

Meaning in English

For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout