Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1121

இன்பத்துப்பால்களவியல்113. காதற்சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழிவாலெயிறு ஊறிய நீர்.

pAloTu tEnkalan taRRE paNimozhivAlEyi RURiya nIr

Shibi Srinivasan

பொருள் / உரை

முருகா எளிய உரை

சொல் பொருள் (பதவுரை):• பணிமொழி = மெல்லிய இனிய மொழிகளைப் பேசும் என் காதலியின்,• வாலெயிறு ஊறிய நீர் = வெண்மையான பற்களிடையே ஊறிவரும் சுவையான உமிழ்நீரானது;• பாலொடு தேன் கலந்தற்று = சுவையான பசும்பாலுடன் தூய தேனைக் கலந்து பருகும் இனிய கலவையைப் போன்றதாகும்.எளிய விளக்கம்:மெல்லிய இனிய மொழிகளைப் பேசுகின்ற என் காதலியின் வெண்முத்துப் பற்களிடையே ஊறிவரும் நீர், பசும்பாலோடு தூய தேனைக் கலந்து பருகும்போது உண்டாகும் இணையற்ற சுவையைப் போன்றதாகும்!

மு.வரதராசன்

மென்மையான மொழிகளைப் பேசு கின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

பரிமேலழகர்

(இயற்கைப்புணர்ச்சி இறுதிக்கண் தலைமகன் தன் நயப்பு உணர்த்தியது.) பணிமொழி வால் எயிறு ஊறிய நீர் - இம்மெல்லிய மொழியினை யுடையாளது வாலிய எயிறூறிய நீர்; பாலொடு தேன் கலந்தற்று - பாலுடனே தேனைக் கலந்த கலவை போலும். ('கலந்தற்று' என்பது விகாரமாயிற்று; கலக்கப்பட்டது என்றவாறு. 'பாலொடு தேன்' என்ற அதனால் அதன் சுவை போலுஞ் சுவையினை உடைத்து என்பதாயிற்று. 'எயிறூறிய' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. வேறு வேறறியப்பட்ட சுவையவாய பாலும் தேனும் கலந்துழி அக்கலவை இன்னது என்று அறியலாகாத இன்சுவைத்தாம் ஆகலின், அது பொருளாகிய நீர்க்கும் எய்துவிக்க.)

சாலமன் பாப்பையா

என்னிடம் மெல்லிதாகப் பேசும் என் மனைவியின் வெண்மையான பற்களிடையே ஊறிய நீர், பாலோடு தேனைக் கலந்த கலவை போலும்!

Meaning in English

The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout