அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்.
anissamum annattin tUviyu mAtaraTikku nerunjsip pazham
Satyan Mahalingam
பொருள் / உரை
முருகா எளிய உரை
உலகத்திலேயே மிக மென்மையானவை என்று போற்றப்படும் அனிச்ச மலரும், அன்னப் பறவையின் மென்சிறகும் கூட, என் காதலியின் மெல்லிய பாதங்களுக்குக் கூரிய நெருஞ்சி முள்ளைப் போலத் துன்பம் தரக்கூடிய அளவுக்கு அவளது காலடிகள் மென்மையானவை!
• அனிச்சமும் = மென்மையான அனிச்ச மலரும்,• அன்னத்தின் தூவியும் = அன்னப் பறவையின் மெல்லிய இறகும்;• மாதர் அடிக்கு = என் காதலியின் மெல்லிய பாதங்களுக்கு,• நெருஞ்சிப் பழம் = முட்கள் நிறைந்த நெருஞ்சி முள்ளைப் போல வருத்தம் தரும்.
மு.வரதராசன்
அனிச்ச மலரும், அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை.
பரிமேலழகர்
(உடன் போக்கு உரைத்த தோழிக்கு அதனது அருமை கூறி மறுத்தது.) அனிச்சமும் அன்னத்தின் தூவியும் - உலகத்தாரான் மென்மைக்கு எடுக்கப்பட்ட அனிச்சப்பூவும் அன்னப்புள்ளின் சிறகும் ஆகிய இரண்டும்; மாதர் அடிக்கு நெருஞ்சிப்பழம் - மாதரடிக்கு நெருஞ்சிப் பழம்போல வருத்தஞ் செய்யும்.(முன் வலிதாதலுடைமையின் பழம் என்றான். இத்தன்மைத்தாய அடி 'பாத்திஅன்ன குடுமிக் கூர்ங்கற்'களையுடைய (அகநா.களிற்.5)வெஞ்சுரத்தை யாங்ஙனம் கடக்கும்'? என்பது குறிப்பாற் பெறப்பட்டது. செம்பொருளேயன்றிக் குறிப்புப் பொருளும் அடிநலனழியாமையாகலின், இதுவும் இவ்வதிகாரத்ததாயிற்று.)
சாலமன் பாப்பையா
உலகம் மென்மைக்குச் சொல்லும் அனிச்சம் பூவும், அன்னப் பறவையின் இளஞ்சிறகும், என் மனைவியின் பாதங்களுக்கு நெருஞ்சிப்பழம் போல வருத்தம் தரும்.
Meaning in English
The flower of the sensitive plant, and the down on the swan's white breast, As the thorn are harsh, by the delicate feet of this maiden pressed





