மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்பலர்காணத் தோன்றல் மதி.
malaranna kaNNAL mukamotti yAyinpalarkANat tOnRal mati
திருக்குறள் / THIRUKKURAL
பொருள் / உரை
முருகா எளிய உரை
நிலவே! மலர் போன்ற கண்களையுடைய என் காதலியின் முகத்திற்கு நீ ஒப்பாக விரும்பினால், ஊரில் உள்ள பலரும் பார்க்கும் வண்ணம் வானில் பொதுவில் தோன்றாதே!
• மதி = வானத்து நிலவே!• மலர் அன்ன கண்ணாள் = மலர் போன்ற கண்களையுடைய என் காதலியின்,• முகம் ஒத்தியாயின் = அழகிய முகத்திற்கு நீ சமமாக விளங்க விரும்பினால்;• பலர்காணத் தோன்றல் = ஊரில் உள்ள அனைவரும் பார்க்கும் வண்ணம் பொதுவில் வானில் தோன்றாதே (என் காதலியைப் போல என்னை மட்டும் காணத் தோன்று).
மு.வரதராசன்
திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே.
பரிமேலழகர்
(இதுவும் அது.) மதி - மதியே; மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் -இம்மலர் போலும் கண்ணையுடையாள் முகத்தை நீ ஒக்க வேண்டுதியாயின்; பலர் காணத்தோன்றல் - இதுபோல யான் காணத் தோன்று; பலர் காணத் தோன்றாதொழி. (தானே முகத்தின் நலம் முழுதும் கண்டு அனுபவித்தான் ஆகலின், ஈண்டும், பலர் காணத்தோன்றலை இழித்துக் கூறினான். தோன்றின் நினக்கு அவ்வொப்பு உண்டாகாது என்பதாம்.)
சாலமன் பாப்பையா
நிலவே மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம் போல ஆக நீ விரும்பினால் நான் மட்டும் காணத் தோன்று; பலரும் காணும்படி தோன்றாதே.
Meaning in English
If as her face, whose eyes are flowers, thou wouldst have charms for me, Shine for my eyes alone, O moon, shine not for all to see





