மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்காதலை வாழி மதி.
mAtar mukampOl oLiviTa vallaiyElkAtalai vAzhi mati
VishnuRam
பொருள் / உரை
முருகா எளிய உரை
வானத்து நிலவே, நீ வாழ்வாயாக! என் காதலியின் களங்கமற்ற முகத்தைப் போல நீயும் ஒளிவீச முடியுமானால், நீயும் என் நெஞ்சார்ந்த காதலுக்கு உரியவளாகி விடுவாய்!
• மதி வாழி = வானத்து நிலவே, நீ வாழ்வாயாக!• மாதர் முகம் போல் = என் காதலியின் ஒளிவீசும் முகத்தைப் போல,• ஒளிவிட வல்லையேல் = என்னைக் கவரும் வண்ணம் களங்கமின்றி நீ ஒளிவீச முடியுமானால்;• காதலை = நீயும் என் அன்பிற்கும் காதலுக்கும் உரியவளாக ஆவாய்.
மு.வரதராசன்
திங்களே! இம் மாதரின் முகத்தைப் போல உண்ணால் ஒளி வீச முடியுமானால், நீயும் இவள் போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) மதி வாழி - மதியே வாழ்வாயாக; மாதர் முகம் போல ஒளி விடவல்லையேல் காதலை - இம்மாதர்முகம் போல யான் மகிழும் வகை ஒளிவீச வல்லையாயின், நீயும் என் காதலையுடையையாதி ('மறு உடைமையின் அது மாட்டாய்; மாட்டாமையின் என்னால் காதலிக்கவும்படாய்', என்பதாம். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு.)
சாலமன் பாப்பையா
நிலவே! நீ வாழ்க! என் மனைவியின் முகம்போல் நான் மகிழும்படி ஒளிவீசுவாய் என்றால் நீயும் என் காதலைப் பெறுவாய்.
Meaning in English
Farewell, O moon! If that thine orb could shine Bright as her face, thou shouldst be love of mine





