தகுதி எனவொன்று நன்றே பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின்.
takuti yenavonRu nanRE pakutiyARpARpaT Tozhukap peRin
Karthik Sritharan
பொருள் / உரை
முருகா எளிய உரை
பகைவர், நண்பர், அயலார் என எவரிடமும் பாரபட்சம் காட்டாமல் நீதி நெறிமுறை தவறாமல் ஒருவன் வாழ்ந்தால், 'நடுவுநிலைமை' என்று கூறப்படும் அந்த ஓர் அறமே அவனுக்கு மிகச் சிறந்த நன்மையைத் தரும்.
• பகுதியால் = பகைவர், நண்பர், அயலார் என்ற பாகுபாடு பார்க்காமல்• பாற்பட்டு ஒழுகப் பெறின் = நீதி நெறிமுறை தவறாமல் ஒருவன் வாழ்ந்தால்,• தகுதி எனவொன்று = 'நடுவுநிலைமை' என்னும் அந்த ஒப்பற்ற அறமே• நன்றே = அவனுக்குப் போதுமான மாபெரும் நன்மையாகும்.
மு.வரதராசன்
அந்தந்தப் பகுதிதோறும் முறையோடு பொருந்தி ஒழுகப்பெற்றால், நடுவுநிலைமை என்று கூறப்படும் அறம் நன்மையாகும்.
பரிமேலழகர்
தகுதி என ஒன்றே நன்று - நடுவு நிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று; பகுதியான் பாற்பட்டு ஒழுகப் பெறின் - பகை, நொதுமல் நட்பு எனும் பகுதிதோறும், தன் முறைமையை விடாது ஒழுகப் பெறின். (தகுதி உடையதனைத் 'தகுதி' என்றார்."ஊரானோர் தேவகுலம்" என்பது போலப் பகுதியான் என்புழி ஆன் உருபு'தோறு'ம் தன் பொருட்டாய் நின்றது. 'பெறின்' என்பது அவ்வொழுக்கத்து அருமை தோன்ற நின்றது. இதனான் நடுவுநிலைமையது சிறப்புக் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
பகைவர், நண்பர், அயலார் என்னும் பிரிவினர் தோறும் நீதி தவறாது பின்பற்றப்படுமானால் நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறம் மட்டுமே வாழ்க்கைக்குப் போதும்.
Meaning in English
If justice, failing not, its quality maintain, Giving to each his due, -'tis man's one highest gain





