Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1107

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.

tammil iruntu tamatupAt tuNTaRRAlammA arivai muyakku

VV Prassanna

பொருள் / உரை

முருகா எளிய உரை

அழகிய மாந்தளிர் நிறமுடைய இந்த மங்கையைத் தழுவி மகிழும் இன்பமானது, தனது சொந்த இல்லத்தில் இருந்துகொண்டு, தன் உழைப்பில் ஈட்டிய உணவைப் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து உண்ணும் போது உண்டாகும் தூய அற இன்பத்தைப் போன்றதாகும்.

• அம்மா அரிவை முயக்கு = அழகிய மாந்தளிர் நிறமுடைய இந்த மங்கையைத் தழுவி மகிழும் இன்பமானது;• தம்மில் இருந்து = தமக்குரிய சொந்த இல்லத்தில் வாழ்ந்து கொண்டு,• தமது பாத்து உண்டற்று = தாம் உழைத்து ஈட்டிய பொருளைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்ணும் போது உண்டாகும் தூய பேரின்பத்தைப் போன்றதாகும்.

மு.வரதராசன்

அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது.

பரிமேலழகர்

(இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று)

சாலமன் பாப்பையா

அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

Meaning in English

As when one eats from household store, with kindly grace Sharing his meal: such is this golden maid's embrace

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout