Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1102

இன்பத்துப்பால்களவியல்111. புணர்ச்சிமகிழ்தல்

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.

piNikku maruntu piRaman aNiyizhaitannOykkut tAnE maruntu

R. Seshadrinathan

பொருள் / உரை

முருகா எளிய உரை

உலகத்தில் உள்ள உடல் நோய்களுக்கெல்லாம் மருந்துகள் அந்த நோய்களை விட வேறான பொருள்களாகவே இருக்கின்றன; ஆனால் அழகிய நகைகளை அணிந்த இவளோ, தன்னால் உண்டான காதல் நோய்க்குத் தானே ஒப்பற்ற அருமருந்தாகவும் திகழ்கிறாள்!

• பிணிக்கு மருந்து பிற = உலகில் உண்டாகும் நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் அந்த நோய்களின் தன்மைகளுக்கு மாறான பிற பொருள்களாகவே இருக்கும்;• அணியிழை = ஆனால் அழகிய நகைகளை அணிந்த இவளோ;• தன் நோய்க்கு தானே மருந்து = தன்னால் உண்டான காதல் நோய்க்குத் தானே அருமருந்தாகவும் இருக்கிறாள்!

மு.வரதராசன்

நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள்.

பரிமேலழகர்

(இடந்தலைப் பாட்டின்கண் சொல்லியது) பிணிக்கு மருந்து பிற - வாதம் முதலிய பிணிகட்கு மருந்தாவன அவற்றிற்கு நிதானமாயினவன்றி மாறாய இயல்பினையுடையனவாம்; அணியிழை தன்நோய்க்கு மருந்து தானே - அவ்வாறன்றி இவ்வணியிழையினை உடையாள் தன்னினாய பிணிக்கு மருந்தும் தானேயாயினாள். (இயற்கைப் புணர்ச்சியை நினைந்து முன் வருந்தினான் ஆகலின் 'தன்நோய்' என்றும், அவ்வருத்தந் தமியாளை இடத்து எதிர்ப்பட்டுத், தீர்ந்தானாகலின் 'தானே மருந்து' என்றும் கூறினான். இப்பிணியும் எளியவாயவற்றால் தீரப்பெற்றிலம் என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக் கண் வந்தது.)

சாலமன் பாப்பையா

நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

Meaning in English

Disease and medicine antagonists we surely see; This maid, to pain she gives, herself is remedy

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout