அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்பசையினள் பைய நகும்.
asaiyiyaR kuNTANTOr EeryAn nOkkappasaiyinaL paiya nakum
Sriram
பொருள் / உரை
முருகா எளிய உரை
நான் அவளை அன்போடு பார்க்கும்போது என் மீது கொண்ட காதலால் மனம் கனிந்து அவள் மெல்லப் புன்னகைக்கிறாள்; மென்மையான இயல்புடைய அவளுக்கு அந்தப் புன்னகையின் போது தோன்றும் முகப்பொலிவில் ஒரு தனிப் பேரழகு மிளிர்கிறது.
• யான் நோக்க = நான் அவளைப் பார்த்து நின்ற போது,• பசையினள் = என் மீது கொண்ட மாறாத அன்பினால் மனம் கனிந்து,• பைய நகும் = அவள் மெல்லப் புன்னகை பூக்கின்றாள்;• அசையியற்கு = மென்மையான இயல்பைக் கொண்ட அவளுக்கு,• ஆண்டு ஓர் ஏர் உண்டு = அந்தப் புன்னகையின் போது தோன்றும் அழகில் எல்லையற்ற ஒரு தனிப் பேரழகு உண்டாகிறது.
மு.வரதராசன்
யான் நோக்கும் போது அதற்காக அன்பு கொண்டவனாய் மெல்லச் சிரிப்பாள், அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது.
பரிமேலழகர்
(தன்னை நோக்கி மகிழ்ந்த தலைமகளைக் கண்டு தலைமகன் கூறியது.) யான் நோக்கப் பசையினள் பைய நகும் - என்னை அகற்றுகின்ற சொற்கு ஆற்றாது யான் இரந்து நோக்கியவழி அஃது அறிந்து நெகிழ்ந்து உள்ளே மெல்ல நகாநின்றாள்;அசையியற்கு ஆண்டு ஓர் ஏர் உண்டு - அதனால் நுடங்கியஇயல்பினை உடையாட்கு அந்நகையின்கண்ணே தோன்றுகின்றதோர் நன்மைக் குறிப்பு உண்டு . (ஏர்: ஆகுபெயர். 'அக்குறிப்பு இனிப் பழுதாகாது' என்பதாம்.)
சாலமன் பாப்பையா
யாரோ எவரோ போல அவள் பேசிய பின்பும் நான் அவளைப் பார்க்க, அவள் மனம் நெகிழ்ந்து மனத்திற்குள் மெல்ல சிரித்தாள்; அச்சிரிப்பிலும் அவளுக்கு ஏதோ ஒரு குறிப்பு இருப்பது தெரிகிறது.
Meaning in English
I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of that soft smile





