உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.
uRAa tavarpOR solinum seRAarsolollai uNarap paTum
Mari Sakthi
பொருள் / உரை
முருகா எளிய உரை
வெளியே ஏதோ முன்பின் தெரியாத அந்நியரைப் போலப் பட்டும் படாமலும் கண்டிப்பது போலப் பேசினாலும், உள்ளத்தில் காதலும் பாசமும் கொண்டிருப்பவரின் அத்தகைய சொற்களின் உள்நோக்கத்தை விரைவில் உணர்ந்து கொள்ள முடியும்.
• உறாஅதவர் போல் சொலினும் = வெளியே அந்நியரைப் போலப் பட்டும் படாமலும் கடுமையாகவும் பேசினாலும்;• செறாஅர் சொல் = உள்ளத்தில் பகையோ வெறுப்போ இல்லாத காதலரின் அந்தச் சொற்களின் உண்மைப் பொருள்,• ஒல்லை உணரப்படும் = விரைவில் காதலனால் தெளிவாகப் புரிந்து கொள்ளப்படும்.
மு.வரதராசன்
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
பரிமேலழகர்
(தோழி சேண்படுத்தவழி அவள் குறிப்பு அறிந்த தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.) உறாஅதவர்போல் சொலினும் - புறத்து நொதுமலர் போலக் கடுஞ்சொல் சொன்னாராயினும்; செறாஅர் சொல் ஒல்லை உணரப்படும் - அகத்துச் செறுதலிலாதார் சொல் பிற்பயத்தல் குறையுற்றாரால் கடிதின் அறியப்படும். (கடுஞ்சொல் என்பது, 'இவ்விடம் காவல் மிகுதி உடைத்து, வரற்பாலிர் அல்லீர்' என்றல் முதலாயின. 'செறார்' எனவே, அருள் உடைமை பெறப்பட்டது. தன் குறை முடிக்கக் கருதியே சேண்படுக்கின்றமை குறிப்பான் அறிந்து, உலகியல் மேலிட்டுக் கூறியவாறு. இது வருகின்ற பாட்டிற்கும் ஒக்கும்.)
சாலமன் பாப்பையா
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
Meaning in English
Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known





