குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்
kuRikkoNTu nOkkAmai allAl orukaNsiRakkaNittAL pOla nakum
A. Sudarshan
பொருள் / உரை
முருகா எளிய உரை
அவள் என்னை நேருக்கு நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கிக் கடைக் கண்ணால் என்னைப் பார்த்துவிட்டுத் தனக்குள்ளே மெல்லப் புன்னகைத்து மகிழ்கிறாள்.
• குறிக்கொண்டு நோக்காமை அல்லால் = அவள் என்னை நேருக்கு நேராக உற்றுப் பார்க்கவில்லை என்பதைத் தவிர;• ஒருகண் சிறக்கணித்தாள் போல = ஒரு கண்ணைச் சுருக்கிக் கடைக்கண்ணால் பார்ப்பவள் போல என்னை நோக்கி,• நகும் = பின் தனக்குள்ளே மெல்ல மகிழ்ந்து புன்னகைக்கிறாள்.
மு.வரதராசன்
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.
பரிமேலழகர்
(இதுவும் அது.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் - நேரே குறிக்கொண்டு நோக்காத் துணையல்ல; ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் - ஒரு கண்ணைச் சிறங்கணித்தாள் போல என்னை நோக்கிப் பின் தன்னுள்ளே மகிழா நிற்கும்.(சிறக்கணித்தாள் என்பது செய்யுள் விகாரம், சிறங்கணித்தல்: சுருங்குதல். அதுதானும் வெளிப்பட நிகழாமையின், 'போல'என்றான். 'நோக்கி' என்பது சொல்லெச்சம். இனிஇவளை எய்துதல் ஒருதலை என்பது குறிப்பெச்சம்.)
சாலமன் பாப்பையா
நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.
Meaning in English
She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed





