யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்தான்நோக்கி மெல்ல நகும்.
yAnOkkum kAlai nilanOkkum nOkkAkkAltAnOkki mella nakum
Tippu
பொருள் / உரை
முருகா எளிய உரை
நான் அவளைப் பார்க்கும் போதெல்லாம் வெட்கத்தால் தலைகுனிந்து நிலத்தைப் பார்க்கும் அவள், நான் பார்க்காமல் திரும்பும் போது என்னைப் பார்த்து உள்ளுக்குள் மெல்லப் புன்னகை பூக்கிறாள்.
• யான் நோக்கும் காலை = நான் அவளை நேராகப் பார்க்கும் போது,• நிலன் நோக்கும் = அவள் நாணத்தால் நிலத்தைப் பார்த்துக் குனிவாள்;• நோக்காக்கால் = நான் பார்க்காமல் திரும்பும் போது,• தான் நோக்கி = அவள் என்னை ஆசையோடு பார்த்து,• மெல்ல நகும் = உள்ளுக்குள் மெல்லப் புன்னகை பூப்பாள்.
மு.வரதராசன்
யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.
பரிமேலழகர்
(நாணினாலும் மகிழ்ச்சியினாலும் அறிந்தது.) யான் நோக்குங்காலை நிலன் நோக்கும் - யான் தன்னை நோக்குங்கால் தான் எதிர்நோக்காது இறைஞ்சி நிலத்தை நோக்காநிற்கும்; நோக்காக்கால் தான் நோக்கி மெல்ல நகும் - அஃது அறிந்து யான் நோக்காக்கால் தான் என்னை நோக்கித் தன்னுள்ளே மகிழா நிற்கும். (மெல்ல வெளிப்படாமல், மகிழ்ச்சியால் புணர்தற் குறிப்பு இனிது விளங்கும். 'மெல்ல நகும்' என்பதற்கு முறுவலிக்கும் என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
நான் அவளை பார்க்கும்போது தலைகுனிந்து நிலத்தைப் பார்ப்பாள், நான் பார்க்காதபோதோ என்னைப் பார்த்து மெல்ல தனக்குள்ளே சிரிப்பாள்.
Meaning in English
I look on her: her eyes are on the ground the while: I look away: she looks on me with timid smile





