நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்யாப்பினுள் அட்டிய நீர்.
nOkkinAL nOkki iRainjsinAL aஃtavaLyAppinuL aTTiya nIr
Rahul Sridhar
பொருள் / உரை
முருகா எளிய உரை
நான் அறியாத போது என்னை அன்புடன் பார்த்துவிட்டு, நான் பார்த்த கணமே நாணத்தால் அவள் தலைகுனிந்தது, எங்களுக்குள் தழைக்கும் காதல் பயிர் செழித்து வளர அவள் ஊற்றிய நீரைப் போன்றதாகும்.
• நோக்கினாள் = நான் அறியாத போது அவள் என்னை அன்போடு நோக்கினாள்;• நோக்கி இறைஞ்சினாள் = நான் பார்த்தவுடன் வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்தாள்;• அஃது = அவளது அந்த நாணச் செயலானது,• யாப்பினுள் = எங்கள் இருவரிடத்தும் தோன்றி வளரும் காதல் பயிரில்,• அவள் அட்டிய நீர் = அவள் ஊற்றிய வளமான நீராகும்.
மு.வரதராசன்
என்னை நோக்கினாள், யான் கண்டதும் நோக்கித் தலைகுனிந்தால், அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும்.
பரிமேலழகர்
(நோக்கினாலும் நாணினாலும் அறிந்தது.) நோக்கினாள் - யான் நோக்கா அளவில் தான் என்னை அன்போடு நோக்கினாள்; நோக்கி இறைஞ்சினாள் -நோக்கி ஒன்றனை யுட்கொண்டு நாணி இறைஞ்சினாள்; அஃது யாப்பினுள் அவள் அட்டிய நீர் - அக்குறிப்பு இருவேமிடையும் தோன்றிய அன்புப்பயிர் வளர அதன்கண் அவள் வார்த்த நீராயிற்று. (அஃது என்னும் சுட்டுப்பெயர், அச்செய்கைக்கு ஏதுவாய குறிப்பின்மேல் நின்றது. யாப்பினான் ஆயதனை, 'யாப்பு' என்றார். ஏகதேச உருவகம்.)
சாலமன் பாப்பையா
நான் பார்க்காதபோது, என்னைப் பார்த்தாள்; பார்த்து நாணத்தால் தலைகுனிந்தாள்; இந்த செயல் எங்களுக்குள் காதல் பயிர் வளர அவள் ஊற்றிய நீராகும்.
Meaning in English
She looked, and looking drooped her head: On springing shoot of love 'its water shed





