Thiruvalluvar Sketch

திருவள்ளுவர் அருளிய
திருக்குறள் 1086

இன்பத்துப்பால்களவியல்109. தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்செய்யல மன்இவள் கண்.

koTumpuruvam kOTA maRaippin naTungkanjarseyyala mannivaL kaN

Sugirtharaja Sapesan

பொருள் / உரை

முருகா எளிய உரை

வில் போன்ற இவளது வளைந்த புருவங்கள் வளையாமல் நேராக நின்று இவளது விழிகளைத் தடுத்து மறைக்குமானால், இவளது கண்கள் என்னை நடுங்கச் செய்யும் இந்தக் காதல் துன்பத்தை எனக்கு உண்டாக்க மாட்டா.

• கொடும் புருவம் = வளைந்த வில் போன்ற இவளது புருவங்கள்,• கோடா = வில்லாக வளையாமல் நேராக நின்று,• மறைப்பின் = இவளது பார்வையின் வீச்சைத் தடுத்து மறைக்குமானால்;• இவள் கண் = இவளுடைய விழிகள்,• நடுங்கு அஞர் = என்னைத் துடிக்கச் செய்து நடுங்க வைக்கும் காதல் துன்பத்தை,• செய்யல மன் = எனக்கு உண்டாக்க மாட்டா!

மு.வரதராசன்

வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும் படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

பரிமேலழகர்

(இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா. (நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)

சாலமன் பாப்பையா

அதோ வளைந்து இருக்கும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று தடுத்தால், அவள் கண்கள், எனக்கு நடுக்கம் தரும் துன்பத்தை தரமாட்டா.

Meaning in English

If cruel eye-brow's bow, Unbent, would veil those glances now; The shafts that wound this trembling heart Her eyes no more would dart

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout