கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்பேதைக்கு அமர்த்தன கண்.
kaNTAr uyiruNNum tORRattAl peNTakaippEtaik kamarttana kaN
Dr. Niranjan Janardhanan
பொருள் / உரை
முருகா எளிய உரை
மென்மையான பெண்மை இயல்பைக் கொண்டுள்ள இந்த இளம் பெண்ணின் கண்கள், தன்னைப் பார்ப்பவர்களின் உயிரையே பறிக்கும் தோற்றத்தோடு கூடி, அவளது மென்மையான குணத்தோடு மாறுபட்டுப் போர் புரிகின்றன.
• பெண் தகை = மென்மையான பெண்மைத் தன்மையும்,• பேதைக்கு = அறியாமையும் கொண்ட இப்பெண்ணிற்கு,• கண் = உள்ள அவளது இரண்டு கண்களும்,• கண்டார் = அவற்றைப் பார்த்தவர்களின்,• உயிர் உண்ணும் தோற்றத்தால் = உயிரையே குடித்துப் பறிக்கும் தோற்றத்தோடு கூடி,• அமர்த்தன = அவளது மென்மையான பெண்மை இயல்போடு மாறுபட்டுப் போரிடுகின்றன.
மு.வரதராசன்
பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.
பரிமேலழகர்
(இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன. (அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)
சாலமன் பாப்பையா
பெண்மைக் குணம் மிக்க இப்பெண்ணின் கண்களுக்கு அவற்றைப் பார்ப்பவர் உயிரைப் பறிக்கும் தோற்றம் இருப்பதால் அவள் குணத்திற்கும் அறிவிற்கும் மாறுபட்டு போர் செய்கின்றன.
Meaning in English
In sweet simplicity, A woman's gracious form hath she; But yet those eyes, that drink my life, Are with the form at strife





