நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்குதானைக்கொண் டன்ன துடைத்து.
nOkkinAL nOkketir nOkkutal tAkkaNangkutAnaikkoN Tanna tuTaittu
Aalaap Raju
பொருள் / உரை
முருகா எளிய உரை
அவள் தன் பேரழகால் என்னை ஈர்த்தது போதாதென்று, நான் அவளைப் பார்க்கும்போது தன் காதல் பார்வையால் என்னை நேருக்கு நேர் நோக்குவது, தானாகவே தாக்கும் ஒரு தெய்வம் மேலும் ஒரு பெரும் படையோடு வந்து என்னை வளைத்துத் தாக்குவது போலிருக்கிறது.
• நோக்கினாள் = தன் பேரழகால் என்னை வருத்திய அத்தலைவி,• நோக்கு எதிர் நோக்குதல் = நான் அவளை நோக்கும் போது அவள் தன் பார்வையால் என் பார்வையை நேருக்கு நேர் எதிர்கொண்டு பார்ப்பதானது;• தாக்கு அணங்கு = தானாகவே தாக்கி உயிரை வருத்தும் ஒரு தெய்வம்,• தானை கொண்டு அன்னது உடைத்து = மேலும் ஒரு பெரும் படையையும் கூட்டிக் கொண்டு வந்து என்னை நேரில் தாக்குவதைப் போன்ற தன்மையைக் கொண்டுள்ளது.
மு.வரதராசன்
நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது.
பரிமேலழகர்
(மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து.(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல்என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா
என் பார்வைக்கு எதிராக அவள் என்னைப் பார்ப்பது, தானே தாக்கி எவரையும் கொல்லும் ஒரு தெய்வம், தாக்குவதற்குப் படைகளையும் கூட்டி வந்ததது போல் இருக்கிறது.
Meaning in English
She of the beaming eyes, To my rash look her glance replies, As if the matchless goddess' hand Led forth an armed band





