அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
assamE kIzhkaLa tAsAram essamavAvuNTEl uNTAm siRitu
Adhira Suresh
பொருள் / உரை
முருகா எளிய உரை
கீழ்மக்களிடம் நல் ஒழுக்கம் தென்படுமானால், அது தண்டனைக்கு அஞ்சும் பயத்தினால் மட்டுமே உண்டானதாகும்; மற்றபடி தமக்கு வேண்டிய பேராசைப் பொருள் கிடைக்குமென்றால் மட்டுமே, அதற்காகச் சிறிதளவு ஒழுக்கமுடையவர்கள் போல நடிப்பார்கள்.
• கீழ்களது ஆசாரம் = கீழ்மக்களிடம் நல் ஒழுக்கம் காணப்படுமானால்,• அச்சமே = அதிகார தண்டனைக்கு அஞ்சும் பயமே அதற்குக் காரணமாகும்;• எச்சம் = மற்றபடி,• அவா உண்டேல் = தமக்கு வேண்டிய பேராசைப் பொருள் ஏதேனும் கிடைக்கும் என்ற நிலை இருந்தால்,• சிறிது உண்டாம் = அதன் பொருட்டுச் சிறிதளவு ஒழுக்கம் போல நடிப்பார்கள்.
மு.வரதராசன்
கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.
பரிமேலழகர்
கீழ்களது ஆசாரம் அச்சமே - கயவரதாய ஆசாரம் கண்டது உண்டாயின், அதற்குக் காரணம் அரசனான் ஏதம் வரும் என்று அஞ்சும் அச்சமே; எச்சம் அவா உண்டேல் சிறிது உண்டாம் - அஃதொழிந்தால், தம்மால் அவாவப்படும் பொருள் அதனால் உண்டாமாயின் சிறிது உண்டாம். (ஆசாரத்தின் காரணத்தை 'ஆசாரம்' என்றும், அவாவப்படுவதனை 'அவா' என்றும் கூறினார். 'எச்சத்தின்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. பெரும்பான்மை அச்சம், சிறுபான்மை பொருட்பேறு, இவ்விரண்டானும் அன்றி இயல்பாக உண்டாகாது என்பதாம். வேண்டிய செய்தலே இயல்பு, ஆசாரம் செய்தல் இயல்பன்று என்பது இதனான் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா
கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.
Meaning in English
Fear is the base man's virtue; if that fail, Intense desire some little may avail





